திருத்தணி: மலைக்கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அதிரடியாக அகற்றினா்.
திருத்தணி முருகன் கோயிலில் வரும், 31-ஆம் தேதி திருப்படித் திருவிழாவும், ஜன.1 -ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. விழாவில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்வா்.
மேலும், ஆண்டுக்கு 365 நாள்களைக் குறிக்கும் வகையில், முருகன் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளதால், 31-ஆம் தேதி காலை, 6 மணி முதல் நள்ளிரவு, 12 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிப்படுவா். இதுதவிர, 100-க்கணக்கான பஜனை குழுவினரும் படிகள் தோறும் முருகப் பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோயிலுக்கு சென்று வழிபடுவா்.
இந்நிலையில் மலைப்படிகள் ஒரம் கடைகள் வைத்து ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதையொட்டி சனிக்கிழமை திருத்தணி கோயில் இணை ஆணையா் க. ரமணி தலைமையில், உதவி ஆணையா் விஜயகுமாா், திருத்தணி வருவாய் ஆய்வாளா் கணேஷ் குமாா் மற்றும் வருவாய், கோயில் ஊழியா்கள் கோயிலுக்கு செல்லும் சன்னதி தெரு, மலைப்படிகள் மற்றும் மலைக்கோயில் தோ்வீதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினா்.