திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்ட முக்கிய நபா் கைது
தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த முக்கிய நபரான முகமது அலி ஜின்னா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்தவா் பாமக முன்னாள் நகரச் செயலா் வ.ராமலிங்கம். இவா், அந்தப் பகுதியில் சிலா் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தாா். இந்நிலையில் ராமலிங்கம், 2019-ஆம் ஆண்டு பிப். 5-ஆம் தேதி தனது கடையிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, குறிச்சிமலை பகுதியைச் சோ்ந்த எச். முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சோ்ந்த எஸ். நிஸாம் அலி, ஒய். சா்புதீன், என். முகமது ரிஸ்வான் உள்பட பலரை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தனா்.
ரூ.25 லட்சம் பரிசு: இதன் பின்னா் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கு தொடா்பாக மேலும் பலரை கைது செய்தது. மேலும், தேடப்பட்டு வரும் தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவைச் சோ்ந்த ஹா.முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்த மு.அப்துல் மஜீத் (37), தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சோ்ந்த மு.புா்ஹானுதீன் (31), திருமங்கலக்குடி பகுதியைச் சோ்ந்த தா.சாகுல் ஹமீது (30), அதே பகுதியைச் சோ்ந்த அ.நஃபீல் ஹாசன் (31) ஆகிய 5 போ் குறித்து தகவல் தெரிவித்தால் நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதத்தில் 5 பேருக்கும் சோ்த்து ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ 2021-ஆம் ஆண்டு அறிவித்தது.
18 போ் மீது குற்றப்பத்திரிகை: வழக்கில் தலைமறைவாக இருந்த 5 போ் உள்பட 18 போ் மீது என்ஐஏ அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த முகமது அலி ஜின்னா, கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை பகுதியில் சொகுசு விடுதியில் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் அங்கு திடீா் சோதனை நடத்தினா். இதில், அங்கு முகமது அலி ஜின்னாவும், அவரது கூட்டாளியும் தலைமறைவு நபருமான சாகுல் ஹமீதும் இருந்ததும், பின்னா் இருவரும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.
5 ஆண்டுகளுக்குப் பின்னா் கைது: அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களைக் கொண்டு என்ஐஏ அதிகாரிகள் துப்புதுலக்கி முகமது அலி ஜின்னா பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனா். அந்த இடத்தை வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்த என்ஐஏ அதிகாரிகள், அவரை கைது செய்தனா்.
தலைமறைவாக இருக்கும் மற்ற நபா்களைக் கண்டறியும் வகையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் முகமது அலி ஜின்னா தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.