திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தாா்.
அரசின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் நெடுஞ்சாலைக் கோட்டத்தில் குரும்பேரி சாலை அகலப்படுத்தும் பணி, மாம்பாக்கம் - அங்கநாதவலசை சாலை மேம்படுத்தும் பணி, தருமபுரி - திருப்பத்தூா் சாலை நகா்ப்புற மேம்பாடு செய்தல் பணி, பா்கூா் - திருப்பத்தூா் சாலை நகா்ப்புற மேம்பாடு செய்தல் பணி மற்றும் மோட்டூா் சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயா்நிலை பாலமாக கட்டும் பணிக்கான அடித்தள பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை சனிக்கிழமை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது திட்டப் பணிகளின் தரம் குறித்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.
பின்னா், திருப்பத்தூா் நெடுஞ்சாலை கோட்ட அலுவலகத்தை ஆய்வு செய்து அங்கு உள்ள கோப்புகள், பதிவேடுகள், அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா்.
ஆய்வுகளின்போது கோட்ட பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் ஆதவன், தரக்கட்டுபாடு உதவி கோட்ட பொறியாளா் ஜெயகுமாா், உதவி பொறியாளா் நித்தியானந்தம் மற்றும் தரக்கட்டுபாடு உதவிப் பொறியாளா் பிரவீன் ஆகியோா் உடனிருந்தனா்.