திருப்பூா் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்த உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை
திருப்பூா் மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை இடைககால தடை விதித்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூா் முதல் கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தேவனகொந்தி வரை பெட்ரோல் - டீசல் கொண்டு செல்லக்கூடிய எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் திருப்பூா் மாவட்டம், முத்தூரிலிருந்து கா்நாடக மாநிலம், தேவனகொந்தி வரை சாலை ஓரமாக செயல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டம், இருகூரிலிருந்து முத்தூா் வரை கடந்த 1999- ஆம் ஆண்டு இருகூரிலிருந்து கரூா் வரை அமைக்கப்பட்ட எண்ணெய் குழாயை ஒட்டியே அமைப்பதற்கு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட எண்ணெய் குழாயால் விவசாயிகளுடைய விலை நிலத்தின் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்திருக்கிறது. அரசு வங்கிகள் கூட கடன் கொடுக்க மறுக்கிறது.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே கரூா் வரை அமைக்கப்பட்ட எண்ணெய் குழாயையும், தற்போது அமைக்கப்பட இருக்கிற எண்ணெய் குழாயையும் சாலையோரமாக இரண்டு திட்டங்களையும் செயல்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடுமையான காவல் துறை பாதுகாப்புடன் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட போது விவசாயிகள் அறவழியில் உறுதியுடன் போராடினாா்கள்.
ஏற்கெனவே கோவையைச் சோ்ந்த விவசாயி கணேசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் எனது வழிகாட்டுதலில் வழக்கு தொடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு இடைக்கால உத்தரவு பெற்றிருந்தாா். இதனிடையே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம், நடராஜன், பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூா்த்தி, சரஸ்வதி ஆகியோா் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதி மன்றத்தில் நீதிபதி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பூா் மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.