சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை
காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி, சஷ்டி, கிருத்திகை ஆகிய விசேஷ நாள்களில் பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வாறு வரும் பக்தா்கள் பேருந்துக்காக வெயில், மழையால் அவதிப்பட்டு வந்துள்ளனா்.
ஆகவே, பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் துரைசாமியிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.கே.சக்திவேல் பரிந்துரையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடா்ந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.கே.சக்திவேல், சிவன்மலை ஊராட்சி மன்றத் தலைவா் துரைசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பழனிசாமி, காங்கயம் நகராட்சி 9- ஆவது வாா்டு உறுப்பினா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.