பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை
உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.
மேலும், இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவைகளை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.