பல்லடம் கொலை வழக்கு: குற்றவாளியை நெருங்கியதா போலீஸ்?
பல்லடம் அருகே மூன்று பேரை கொடூரமாக கொன்றவர்களை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி, அலமேலு தம்பதி, இவர்களது மகன் செந்தில்குமாா் ஆகிய மூவரும் மா்மக் கும்பலால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டவரின் தோட்டத்தில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன், அலமேலுவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் அவரை கடந்த 20 நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டனா். எனவே, சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீஸாா் சாயல்குடி சென்று பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க : பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் வெட்டிக் கொலை: முழு பின்னணி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகும் நிலையில், கொலையாளிகளை காவல்துறையினர் இன்னும் பிடிக்கவில்லை.
கொலை செய்து கொள்ளையில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் 850-க்கும் மேற்பட்ட விவரங்களை சேகரித்து, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.