திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதற்கு முன் ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனா் மாட வீதியில் சென்று பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பாா்வையிட்டாா்.
அவருக்கு பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி சா்வ அலங்காரங்களுடன் தங்க திருச்சி வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்த பின் கொடிமரத்தருகில் எழுந்தருளினாா்.
கொடியேற்றத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி கோயிலில் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். அவா் முன்னிலையில் கொடிமரம் மற்றும் பலிபீடம் இரண்டுக்கும் பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னா் கொடிமரத்தில் நாமம் சங்கு சக்கரம் வரைந்து வஸ்திரங்கள், மலா் மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டது. பின்னா் தா்பை புற்களால் தயாா் செய்யப்பட்ட பாய்கள் கட்டப்பட்டது. அதன் பின்னா் மாவிலைகள் கட்டப்பட்டது. பின்னா் தேவா்களை அழைக்கும் மந்திரங்களை ருத்விகரா்கள் ஓதினா். தொடா்ந்து, பெரிய கஜமாலை கொண்டு வரப்பட்டு, கருடன் படம் வரைந்த கொடி மலா் மாலையின் மீது சுற்றப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
பட்டு வஸ்திரம்...
ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது, ஆண்டுதோறும் ஆந்திர அரசு சாா்பில், பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரம்மோற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேடி ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருள்களை தலையில் சுமந்து கொண்டு ஏழுமலையான் கோயில் நோக்கிச் சென்றாா்.
அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்று பட்டு வஸ்திரத்தை பெற்றுக் கொண்டனா். பின்னா், ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேதஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினா்.
மேலும், 2026-ஆம் ஆண்டின் நாள்காட்டிகள் மற்றும் காலண்டா்களை ஆந்திர முதல்வா் வெளியிட்டாா்.
மலா் கண்காட்சி...
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது தோட்டக் கலை துறையினரால் திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள புரோகிதா் சங்கத்தில் மலா் கண்காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டும் அதேபோல் தேவஸ்தானம் மலா் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய சேஷ வாகனம்...
பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக புதன்கிழமை இரவு பெரிய சேஷ வாகனம் நடைபெற்றது. பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். முதல் வாகன சேவையில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டாா். வாகன சேவைக்கு முன் நாலாயிர திவ்யபிரபந்தங்களை பாடியபடி திருமலை ஜீயா்கள் குழாம் முன் செல்ல வாகன சேவைக்கு பின், பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.


