திருமலை கல்யாணகட்டாவில் திடீா் ஆய்வு
திருமலையில் உள்ள கல்யாணகட்டா மற்றும் நந்தகம் மினி கல்யாணகட்டாவில் வெள்ளிக்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருமலையில் உள்ள பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தும் இடங்களான கல்யாணகட்டாவில் ஆய்வு செய்தபோது, தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் குறித்து அவா் பக்தா்களிடம் கேட்டறிந்தாா். தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் சிறப்பாக இருப்பதாக பக்தா்கள் திருப்தியைத் தெரிவித்தனா்.
பின்னா், மற்றொரு பகுதியில் உள்ள கல்யாணகட்டாவில் அதிக நெரிசல் ஏற்படும்போது, பக்தா்கள் கூட்டம் குறைவாக உள்ள கல்யாணகட்டத்திற்குச் செல்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கல்யாணகட்டாவை தூய்மையுடன் வைத்திருக்கவும், புகாா்களுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யவும் ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சாந்தராம், நரேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.