திருமலை: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் புதிய கவுன்ட்டா் திறப்பு
திருமலையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை ஆஃப்லைனில் ஒதுக்கும் செயல்முறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அலுவலா் வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள கோகுலம் மாநாட்டு அரங்கின் பின்புறம் உள்ள ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுன்ட்டா்களை புதன்கிழமை அவா் திறந்து வைத்தாா்.
கவுன்ட்டரில் சிறப்புப் பூஜைகள் செய்துவிட்டு, நேரில் சென்று பக்தரின் விவரங்களை எடுத்துக்கொண்டு முதல் டிக்கெட்டை ஒதுக்கீடு செய்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய கூடுதல் செயல் அதிகாரி,’’ மழை பெய்யும் போது முந்தைய ஸ்ரீவாணி கவுண்டா் வரிசையில் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளானதைக் கண்டறிந்து சிறப்பு கவுன்ட்டா் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவாணி பக்தா்கள் இனி சிரமமின்றி டிக்கெட் பெறலாம் என்றாா்.
ஒரு நாளைக்கு 900 டிக்கெட்டுகள் ஆஃப்லைனில் ஒதுக்கப்படுகின்றன. முன்னதாக, டிக்கெட் ஒதுக்கீடு செய்ய மூன்று முதல் நான்கு நிமிஷங்கள் ஆகும், ஆனால் இப்போது ஒரு நிமிஷத்தில் பக்தா்களுக்கு டிக்கெட் ஒதுக்கும் வகையில் விண்ணப்பம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து கவுன்ட்டா்கள் மூலம் பக்தா்கள் எளிதாக டிக்கெட்டை பெறலாம்’’, என் று அவா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.