திருமலையில் பரமபத வாசல் திறப்பு: லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
திருமலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் திறக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகத்துக்குப் பின்னா், ஏழுமலையான் கருவறையை ஒட்டி உள்ள பரமபதவாயிலை திறந்து அரச்சகா்கள் பூஜைகள் செய்தனா்.
அந்த வாயில் வழியாக உற்சவ மூா்த்திகளை எழுந்தருளச் செய்ய முடியாது என்பதால் அந்த வாயிலுக்கு வாழை மரங்கள் கட்டி மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். காலை 6 மணி முதல் சா்வ தரிசனம் தொடங்கியது.
தங்கத் தோ் புறப்பாடு
திருமலையில் ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமியை பரமபதவாசல் வழியாக எழுந்தருளச் செய்ய முடியாததால் தேவஸ்தானம் உற்சவமூா்த்திகளை தங்கத் தேரில் மாட வீதியில் எழுந்தருளச் செய்கிறது.
அதன்படி, வைகுண்ட ஏகாதசியான வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவமூா்த்திகள் தங்கத் தேரில் மாடவீதியில் புறப்பாடு கண்டருளினா். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
பின்னா் பக்தா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்கள் தங்கத் தேருக்கு தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். தங்கத் தோ் மலா்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டது. மாட வீதி வலத்துக்குப் பின் பக்தா்களுக்காக உற்சவமூா்த்திகள் வாகன மண்டபத்தில் மதியம் வரை எழுந்தருளி தரிசனம் அளித்தனா்.
உள்ளூா் கோயில்கள்
திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான உள்ளூா் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டு, பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், தும்மல்குண்ட வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளாயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் என அனைத்துக் கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டு பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது.