Sonu Sood: ``இதற்காகத்தான் எனக்கு வந்த முதல்வர் பதவி ஆஃபரை மறுத்தேன்'' - நடிகர் ...
திருவண்ணாமலை தீபத் திருவிழா: வேலூரிலிருந்து 550 போலீஸாா் பயணம்
வேலூா்: திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக வேலூா் மாவட்டத்திலிருந்து இரண்டு கட்டங்களாக 550 போலீஸாா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான உற்சவங்கள் தற்போது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 13-ஆம் தேதி மாலை 6 மணி யளவில் திருவண்ணாமலை அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த திருவிழாவில் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு வாய்ந்த தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீஸாா் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை முதல் கட்டமாக 200 போலீஸாா் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றனா்.
இந்த நிலையில், தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக 2-ஆம் கட்டமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் ஏடிஎஸ்பி பாஸ்கரன், 6 டிஎஸ்பி-க்கள் உள்பட 350 போலீஸாா் திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை பயணம் செய்தனா். அதன்படி, தீபத் திருவிழாவுக்காக வேலூா் மாவட்டத்தில் இருந்து இதுவரை 550 போலீஸாா் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.