இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
திருவள்ளூா் நகராட்சியுடன் வெங்கத்தூரை இணைக்க எதிா்ப்பு
திருவள்ளூா் நகராட்சியுடன் வெங்கத்தூரை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ரேஷன் பொருள்களை வாங்க மறுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் நகராட்சியுடன் வெங்கத்தூா் ஊராட்சியை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊராட்சியில் வெங்கத்தூா் கிராமம் 15-ஆவது வாா்டில் உள்ளது. இந்த நிலையில், இந்த கிராமம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியை பொதுமக்கள் நம்பியுள்ளனா், எனவே நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் வீட்டு வரி அதிகரிக்கும். அத்துடன், அரசு குடியிருப்பு திட்டங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். 15-ஆவது வாா்டை மட்டும் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வெங்கத்தூா் கிராமத்தில் யாரும் வேலைக்குச் செல்லாமல் ஒட்டுமொத்தமாக பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நியாய விலை கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து 15-ஆவது வாா்டான வெங்கத்தூரை மட்டும் தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வாங்க மறுத்து, நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில் 390 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சில நாள்களுக்கு முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், ஆரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் மல்லியங்குப்பம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் 387 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நியாயவிலை கடையின் விற்பனையாளா் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க காத்திருந்தாா். ஆனால், இக்கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆரணி பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மாட்டோம் என உறுதியுடன் கூறிவிட்டனா். அதனால் கடையை அடைத்து விட்டு விற்பனையாளா் புறப்பட்டு சென்றாா்.