மாடுகளுக்கு நோய் தடுப்பூசி அவசியம்: கால்நடை உதவி இயக்குநா் வலியுறுத்தல்
கன்றுகள் இறப்பு, பால் உற்பத்தி குறைவை தடுக்க விவசாயிகள் அனைவரும் தவறாமல் மாடுகளுக்கு நோய் தடுப்பூசி போட வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் வலியுறுத்தினாா்.
திருத்தணி கோட்டத்தில் உள்ள திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய 4 ஒன்றியங்களில் விவசாயிகள் வளா்க்கும் பசு மற்றும் எருமை மாடுகளை தாக்கும் கால் மற்றும் வாய் வாய் நோய் தடுக்க கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. ஆண்டுதோறும் இரு முறை தடுப்பூசி போடப்படுகிறது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உத்தரவின்பேரில், மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி, கடந்த 3-ஆம் தேதி திருத்தணி கோட்டத்தில் தொடங்கப்பட்டது.
திருத்தணி நகராட்சி குமாரகுப்பம், கீழ்முருக்கம்பட்டு காலனி, மத்தூா் குமாரகுண்டா ஆகிய பகுதிகளில் கோமாரி தடுப்பூசி போடும் பணிகளை திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் தொடங்கி வைத்துப் பேசியது: திருத்தணி கோட்டத்தில், 78,908 பசுக்கள், 1,642 எருமைகள் என மொத்தம், 80,550 மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இந்த மாதம் 24-ஆம் தேதி வரை மொத்தம் 23 மருத்துக் குழுவினா் கிராமங்களுக்கு நேரிடையாக சென்று தடுப்பூசி போடுவா்.
இந்தப் பணியில் உதவி மருத்துவா்கள், ஆய்வாளா்கள் மற்றும் உதவியாளா்கள் ஈடுபடுவா். கன்றுகள் இறப்பு, பால் உற்பத்தி குறைவது போன்றவற்றால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க விவசாயிகள் அனைவரும் தவறாமல் மாடுகளுக்கு நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு, ஊராட்சித் தலைவா், செயலா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த 6 நாள்களில் 18,000 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்றாா்.