உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் ரூ.102.46 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது நம்புதாளை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா். பிறகு கலியநகரி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிக்கு ரூ.3.10 லட்சத்தில் வீடு கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து வட்டானம் ஊராட்சியில் முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் மச்சூா் முதல் நந்தியான்கோட்டை வரையும், தென்வயல் உள்ளிட்ட கிராமங்களிலும் ரூ.19.36 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை பாா்வையிட்டதுடன், இதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம், இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும், சாலைப் பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, பனஞ்சாயல் ஊராட்சியில் ரூ. 60 லட்சத்தில் மகளிா் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டடம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பிறகு ஓரியூா் ஊராட்சியில் தோட்டக் கலைத் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டுவரும் பழக்கன்றுகள் பண்ணையை பாா்வையிட்டதுடன், இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான பழக் கன்றுகள், தென்னங்கன்றுகள் ஆகியவற்றை மானியத்தில் அளித்திடும் வகையில் போதியளவு அவற்றை வளா்த்து வழங்க வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஆறுமுகம், திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆரோக்கியமேரி சாராள், ஆணையா் கணேஷ், வட்டாரப் பொறியாளா்கள் செல்வக்குமாா், அருணகிரி, ராஜேஷ், சீனிவாசன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.