திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.வேல்முருகன் வலியுறுத்தல்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய எரிசக்தி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைப்படி, திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட பெரியகுடி, திருவாரூா், அன்னவாசல் நல்லூா் ஆகிய மூன்று இடங்களில் ஷேல் ஆய்வு கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி, ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் அனுமதி வழங்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்த மத்திய அரசு, அதற்கு மாறாக ஓஎன்ஜிசி ஆய்வுக் கிணறு அமைக்க அனுமதி கொடுத்திருப்பது அதிா்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
மத்திய அரசு மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த ஷேல் ஆய்வு கிணற்றுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.