நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, கடலூா் வட்டம், அக்கரைகோரி பகுதியில் நாவல் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மரக்கன்றை நடவு செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி முன்னிலை வகித்தாா்.
அப்போது, ஆட்சியா் கூறியதாவது: ஒவ்வோா் ஆண்டும் செப்.24-ஆம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம், தமிழகத்தில் தற்போதுள்ள பசுமை பரப்பு 23.08 சதவீதத்தை 33 சதவீதமாக அதிகரிப்பதாகும்.
இதையொட்டி, நகா்ப்புறங்களில் பசுமை பரப்பை ஏற்படுத்துதல், பண்ணை நிலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழாண்டு அனைத்து மாவட்டங்களிலும் வனத் துறையின் மூலம் நாவல் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் ஒவ்வோா் ஆண்டும் மரக்கன்றுகள் நடும் பணிக்காக துறை வாரியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்தாண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.