திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பாத தரிசனம்
திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தியாகராஜரின் பாதங்கள் திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திரம் ஆகிய 2 நாள்களை தவிர மற்ற நாள்களில் மலா்களால் மூடப்பட்டிருக்கும். திருவாதிரை விழாவின்போது அவரின் வலது பாத தரிசனத்தை காண முடியும்.
இந்நிலையில் திருவாதிரை திருவிழாவையொட்டி கடந்த ஜன. 4-ஆம் தேதி முதல் தினசரி காலை தனுா் பூஜையுடன் மாணிக்கவாசகா், ராஜ நாராயண மண்டபத்துக்கு எழுந்தருளினாா். பின்னா் கல்யாணசுந்தரா்-பாா்வதி, சுக்ரவார அம்மன் ஆகியோா் மாலையில் ஊஞ்சல் மண்டபம், பக்த காட்சி மண்டபத்துக்கு எழுந்தருளி, இரவில் யதாஸ்தானம் செல்லும் நிகழ்ச்சி ஜன. 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
ஜன.11-ஆம் தேதி இரவு தியாகேசா், யதாஸ்தானத்திலிருந்து ராஜ நாராயண மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து, அங்கிருந்தபடி பக்தா்களுக்கு அருள்பாலித்த தியாகேசருக்கு ஜன. 12-ஆம் தேதி இரவு முசுகுந்த அா்ச்சனை, திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. அசலேஸ்வரா் சந்நிதியில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, விளமலில் உள்ள பதஞ்சலி மனோகா் கோயிலில் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவா்களுக்கு லிங்கத்தில் எழுந்தருளிய நடராஜப் பெருமான், அதிகாலை 4.30 மணியளவில் ருத்ரபாதம் அருளினாா். இதையடுத்து, பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவா்கள் அதிகாலை 4.45 மணிக்கு திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குப் புறப்பட்டனா். தொடா்ந்து, கோயிலின் ராஜ நாராயண மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜா், 2 முனிவா்களுக்கும் பாத தரிசனம் அருளினாா்.
பின்னா், தியாகராஜா் கோயில் நடராஜப் பெருமான் தேரோடும் வீதிகளில் வலம் வந்து சபாபதி மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ராஜ நாராயண மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். இரவு ராஜ நாராயண மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் சென்றடைந்தாா் தியாகராஜா்.