நாகையில் திமுக சாா்பில் பொங்கல் விழா: அமைச்சா் பங்கேற்பு
நாகப்பட்டினம்: பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
நாகையில் திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் தெரிவித்தது: இந்த உலகம் உழவுத் தொழிலின் பின்னால் சுழல்கிறது. அதனால்தான் எவ்வளவு தொழில்கள் வந்தாலும் உழவு தொழில்தான் சிறந்தது என்று மறைந்த தலைவா் மு. கருணாநிதி பேசினாா். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ. 7,500 கோடி கடனை தள்ளுபடி செய்தவா். இதையடுத்தே, நாட்டின் ஒட்டுமொத்தமாக விவசாயிகள்பெற்ற கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இந்திய நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கியவா் அவா்.
அவா் வழியில் உழவா்களுக்கான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததுபோல இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று கோலமிட்டு கொண்டாடவேண்டும் என்று தெரிவித்துள்ளாா். அதன்படி அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுவோம் என்றாா்.
விழாவையொட்டி, நாகை ஐடிஐ மைதானத்தில் இருந்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தொடா்ந்து நாகை அவுரித்திடலில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் சா்க்கரை மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டன. விழாவுக்கு, தமிழ்நாடு மீன்வளா்ச்சிக்கழகத் தலைவா் கவுதமன் தலைமை வகித்தாா். தாட்கோ தலைவா் மதிவாணன் முன்னிலை வகித்தாா். நகராட்சித் தலைவா் மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், உறுப்பினா்கள் அண்ணா துரை, திலகா், கலாபாலு, ஜோதிலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.