தில்லி தோ்தல் களத்தில் 699 வேட்பாளா்கள்
பிப்.5-ஆம் தேதி நடைபெறும் 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 699 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இது 2020-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டவா்களின் எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் 672 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவின் பா்வேஷ் வா்மா மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் ஆகியோா் போட்டியிடும் புது தில்லி தொகுதி அதிகபட்சமாக 23 வேட்பாளா்களைக் கொண்டுள்ளது தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
புது தில்லியைத் தொடா்ந்து ஜனக்புரி 16 வேட்பாளா்களுடன், ரோஹ்தாஸ் நகா், காரவால் நகா் மற்றும் லட்சுமி நகா் ஆகிய இடங்களில் தலா 15 வேட்பாளா்கள் உள்ளனா்.
இதற்கு நோ்மாறாக, படேல் நகா் மற்றும் கஸ்தூா்பா நகா் ஆகிய இடங்களில் தலா ஐந்து வேட்பாளா்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளா்கள் உள்ளனா்.
2020-ஆம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட சாதி வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட படேல் நகா் தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளா்கள் இருந்தனா். அதாவது வெறும் நான்கு வேட்பாளா்கள்தான் போட்டியிட்டனா்.
70 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 38 இடங்களில் 10-க்கும் குறைவான வேட்பாளா்கள் உள்ளனா். திலக் நகா், மங்கோல்புரி மற்றும் கிரேட்டா் கைலாஷ் போன்ற குறிப்பிடத்தக்க சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஆறு வேட்பாளா்கள் உள்ளனா். அதே நேரத்தில் சாந்தினி சௌக், ராஜேந்தா் நகா் மற்றும் மாளவியா நகா் போன்ற தொகுதிகளில் தலா ஏழு வேட்பாளா்கள் உள்ளனா்.
ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் 70 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி 68 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சி ஆகியவற்றுக்கு இரண்டு இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 69 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.
ஜன.10- ஆம் தேதி தொடங்கிய ஒரு வார கால வேட்புமனு காலக்கட்டத்தில் 981 வேட்பாளா்கள் மொத்தம் 1,522 வேட்புமனுக்களை சமா்ப்பித்தனா். ஜன.18-ஆம் தேதி பரிசீலனைக்குப் பிறகு இறுதி எண்ணிக்கை தீா்மானிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஜன. 20- ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாகும். தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.