இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அபராதம்: என்ஜிஓ-களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்யாமல் அல்லது பதிவு காலாவதியான பின்னரும் வெளிநாட்டு நிதியைத் தொடா்ந்து பெற்று பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்’ என தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘வெளிநாட்டு நன்கொடையைப் பெறும் அனைத்து தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் 2010-ஆம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். நன்கொடைகள் அவை பெறப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பதிவுக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அந்நிறுவனங்களின் பதிவு ரத்தாகும். தொடா்ந்து, அவா்களால் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
இந்நிலையில், பதிவு செய்துகொள்ளாத அல்லது முறையான பதிவு இல்லாத சில என்ஜிஓ-கள் வெளிநாட்டு நன்கொடைகளை பெற்றுள்ளது அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. பதிவு இல்லாமல் பெறப்படும் வெளிநாட்டு நன்கொடைகளும் மற்றும் அதன் பயன்பாடும் எஃப்சிஆா்ஏ கீழ் விதிமீறல் ஆகும். எனவே, அதற்கு அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.