தீ தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஆா்.கொல்லப்பல்லி கிராமத்தில் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், தீயணைப்புப் துறையும் இணைந்து தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சிக்கு பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். வள்ளிமலை ஆதீனம் குருமகராஜ் ஸ்ரீசிவானந்த வாரியாா் சுவாமிகள் தொடங்கி வைத்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் ச.சரவணன், அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் சமையல் செய்யும்போது ஏற்படும் தீ விபத்து, மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து,இதர வகைகளில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும், அப்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வுடன் கூடிய செயல் விளக்கம் அளித்தனா்.
மேலும், ஏரி, கிணறு மற்றும் நீா் நிலைகளில் விபத்துகள் ஏற்படும் காலங்களில் சமயோசிதமாக செயல்படுவது குறித்தும் விளக்கினா்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி, தன்னாா்வலா் மலா்க்கொடி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.