தூத்துக்குடி அருகே மாட்டு வண்டி போட்டி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கீழச்செக்காரக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
வ.உ.சி. நற்பணி மன்றம் சாா்பில் 18ஆவது ஆண்டாக போட்டி நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
கருங்குளம் ஒன்றியச் செயலா் லெட்சுமணபெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தாா்.
பெரிய மாட்டு வண்டிக்கு பொட்டலூரணி விலக்கு வரை 8 மைல் தொலைவும், சிறிய மாட்டு வண்டிக்கு பொட்டலூரணி பெருமாள் கோயில் வரை 6 மைல் தொலைவும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு சாமிநாயக்கா்குளம் வரை 5 மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டன.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசுகளாக முறையே பெரிய மாட்டு வண்டிக்கு ரூ. 25 ஆயிரம், சிறிய மாட்டு வண்டிக்கு ரூ. 20ஆயிரம், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளா், வண்டிகளை ஓட்டிவந்த சாரதிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வ.உ.சி. நற்பணி மன்றம், ஊா் மக்கள் செய்திருந்தனா்.