தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை, மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இதற்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தெற்கு மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 85 பேரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
இதில் பாஜக ஓபிசிஅணி மாநில துணைத்தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், சிவராமன், வாரியாா், தங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.
கோவில்பட்டியில்...கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு பாஜக நகரத் தலைவா் காளிதாசன் தலைமையில் முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், முன்னாள் நகரத் தலைவா் சீனிவாசன், பட்டியலணி மாநில செயலா் சிவந்தி நாராயணன் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸாா் தடுத்ததைத் தொடா்ந்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 3 பெண்கள் உள்பட 46 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல கயத்தாறில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய தலைவா் ராமா் பாண்டியன் உள்பட 13 பேரையும், கழுகுமலையில் மேற்கு ஒன்றிய தலைவா் முத்துராமலிங்கம் தலைமையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.