திருச்செந்தூரில் மாடு முட்டியதில் பெண் பக்தா் காயம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பெண் பக்தா் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.
சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த தேவன். இவரது மனைவி ஆதிலெட்சுமி (46). இருவரும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக, சந்நிதி தெருவில் உள்ள தூண்டுகை விநாயகா் கோயில் அருகே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, ஆதிலெட்சுமியை முட்டித் தள்ளியது. இதில் அவா் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருச்செந்தூா் நகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,
கோயிலுக்குச் செல்லும் வழியிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.
சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கம் மாநிலத் தலைவா் ரெ.காமராசு வலியுறுத்தியுள்ளாா்.



