ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 1,2 ஆகிய அலகுகளில் ஹெச்டி கேபிள் வயா்கள், பிரேக்கா்கள், கண்ட்ரோல் அறைகள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமாகின. 3ஆவது அலகிலும் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, 1,2,3 ஆகிய மூன்று அலகுகளிலும் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 1,2 அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க சுமாா் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என அண்மையில் ஆய்வுக்கு வந்த தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் அல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா். மேலும், இந்த தீ விபத்து சேத விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பொறியாளா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் இது தொடா்பாக ஆய்வு மேற்கொள்வா் எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.
அதன்படி, அனல் மின் நிலைய தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை பொறியாளா் கனி கண்ணன் தலைமையில் வடசென்னை, மேட்டூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களைச் சோ்ந்த பொறியாளா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் அனல் மின் நிலையத்தில் ஆய்வை தொடங்கியுள்ளனா். 10 நாள்களுக்குள் ஆய்வு செய்து சேதம் மதிப்பு உள்ளிட்டவை குறித்த அறிக்கையை அரசுக்கு வழங்க உள்ளதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.