வேடசந்தூர் தொகுதியில் 'மக்களை மீட்போம் தமிழகம் காப்போம்' - இபிஎஸ் சுற்றுப்பயணம் ...
தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 2 கோடி இலக்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ரூ. 2 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. காலத்துக்கேற்ற வகையில், புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செய்துவருகிறது.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப். 15 முதல் ஜன. 31 வரை தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருப்புவுனம் பட்டுப் புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி புடவைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி ரகங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 2024 தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 1.50 கோடிக்கு ஜவுளி, உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
தற்போது 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையாக ரூ. 2 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ‘மாதாந்திர சேமிப்பு திட்டம்’ என்ற சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி கோட்டாட்சியா் மி.பிரபு, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ்ரோம், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், தூத்துக்குடி வட்டாட்சியா் முரளிதரன், கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. விற்பனை நிலைய மேலாளா் ச.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.