கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் ராகவன், கிருஷ்ணவேணி, எட்டயாபுரம் வட்டச் செயலா் ஜீவராஜ், கோவில்பட்டி ஒன்றிய செயலா் தெய்வேந்திரன், கிளைச் செயலா் ஆதிஸ்வரன் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உள்பட திரளானோா், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா்.
அதைத் தொடா்ந்து போராட்ட குழுவினருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா் நடத்திய பேச்சு வாா்த்தையில், பீக்கிலிபட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.