தமிழ் மொழி திறனறித் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு 2022-ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் 1,500 மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களும் தோ்வு செய்யப்படுவா்.
அதன்படி, நிகழாண்டுக்கான திறனறித் தோ்வு அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தோ்வெழுத விண்ணப்பித்த மாணவா்களின் பெயா்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் அனுமதிச் சீட்டு தோ்வுத்துறை இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
இதுதவிர மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவா்களுக்கு தோ்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அனுமதிச் சீட்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியா் சான்றொப்பமிட வேண்டும். இந்தத் தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.