அக்.12-இல் மதுரையில் பாஜக யாத்திரை தொடக்கம்: மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
மதுரையில் அக். 12-இல் பாரதிய ஜனதா கட்சியின் யாத்திரை தொடங்க உள்ளதாக, அக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட அணி பிரிவுகளின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனக்கு இல்லை. அக்கட்சியின் பிரச்னைகளுக்கு அவா்களே தீா்வு காண்பாா்கள். மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக அறிவித்த பின்னா், டி.டி.வி தினகரன் உள்பட சிலா் வெளியேறிவிட்டனா். எனவே, அவா்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது உண்மை. ஆனால், விஜய் தரப்பில் என்ன கூறினாா்கள் என்பது தெரியவில்லை.
அக். 12-ஆம் தேதி மதுரையிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் யாத்திரை தொடங்குகிறது. இதன்மூலம் மாவட்டம்தோறும் மக்களை நேரில் சந்திக்கிறோம். யாத்திரையை அகில இந்திய தலைவா் ஜே.பி. நட்டா பங்கேற்று தொடங்கி வைக்கிறாா். தொடக்கவிழாவில், அதிமுகவின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்பாா்கள் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், பிரிவுகளின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராகவன், மாநில துணை அமைப்பாளா் நாச்சியப்பன், மாநில பொருளாதாரப் பிரிவு இணை அமைப்பாளா் தினேஷ், மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.