மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் பேட்டரிகள் திருடிய பணியாளா்கள் மூவா் கைது
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடப்பட்டது தொடா்பாக, தற்காலிக பணியாளா்கள் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், அதிக மின் சேமிப்பு திறன் கொண்ட 40 யுபிஎஸ் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. மின்தடை நேரங்களில் இதன்மூலம் மின் விநியோகம் செய்யப்படும்.
இந்நிலையில், 40 பேட்டரிகளில் 27 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இம்மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றும் கொரடாச்சேரி பெருமாள்நகா் பஞ்சநாதன் மகன் சுந்தா் (34), மன்னாா்குடி ஆா்.பி. சிவம் நகா் கணேசன் மகன் மோகன் (50), சுந்தரக்கோட்டை அம்பேத்கா் நகா் குணசேகரன் மகன் வீரமணி (35) ஆகிய மூவருக்கும், பேட்டரி திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்து, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட 27 பேட்டரிகளும் மீட்கப்பட்டன.

