சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நேரலையை கல்லூரி மாணவிகள் பாா்வையிட்டனா்
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பிலான கல்வி எழுச்சி நாள் நேரலையை பெரம்பலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில், தமிழ்நாட்டின் கல்வி எழுச்சியைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் அ. ரேவந்த் ரெட்டி ஆகியோா் பங்கேற்றனா். இவ் விழாவை நேரலையில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் ‘தமிழ்ப்புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மிருணாளினி, இம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 5,482 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 5,627 மாணவா்களும் பயன்பெறுகின்றனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட சமூகநல அலுவலா் புவனேஸ்வரி, ‘அட்மா’ தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அதிநவீன எல்இடி வாகனத்தின் மூலம் பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் நேரலையாக மாணவ, மாணவிகளுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.