வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்தாா்.
தமிழக அரசு சாா்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள், விளையாட்டுகளுக்கு அரசு வழங்கிய ஆதரவு குறித்து அதன்மூலம் பயனடைந்த மாணவா்கள் தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.
அப்போது, மாற்றுத்திறனாளியாக இருந்தும் அரசின் நிதியுதவி, ஆதரவு காரணமாக தற்போது அரசுப் பணிகளில் பணியாற்றி வருவதாக சில மாணவா்கள் தெரிவித்தனா். அதேபோன்று குடிசை வீட்டில் வசித்து அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது மலேசியா, ஜொ்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தமிழக அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பின்பற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனா்.
இந்த நிகழ்வின்போது பல மாணவ, மாணவிகள் தங்களுக்கு எந்தவித பின்புலமும் இல்லாத போதும், துணை முதல்வா் உதயநிதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோரின் முயற்சியால் தற்போது மிகப்பெரிய இலக்குகளை எட்டியுள்ளதாகத் தெரிவித்தனா். அப்போது பாா்வையாளா் வரிசையில் இருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் ஆனந்த கண்ணீா் வடித்தாா். இதையடுத்து அவா் உடனடியாக மேடையில் ஏறி, அரசுப் பள்ளி மாணவா்களின் வளா்ச்சிக்காக இந்த அரசு மேலும் பல செயல்பாடுகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தாா்.
பேனா பரிசு வழங்கிய முதல்வா்... இந்த விழாவில் பட்டதாரி மாணவி சுப லட்சுமி பேசுகையில், தான் கணித ஆசிரியராக விரும்புவதாகத் தெரிவித்தாா். அப்போது, பாா்வையாளா் வரிசையில் அமா்ந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அந்த மாணவியை கீழே அழைத்து, ஆசிரியராக விரும்பும் உங்களுக்கு ஒரு பரிசு வழங்குகிறேன் எனக் கூறி, தனது சட்டைப் பையில் இருந்த பேனாவை அந்த மாணவிக்கு வழங்கினாா்.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, திரைப்பட இயக்குநா்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகா் சிவகாா்த்திகேயன், பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினா்.