ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்
கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை பயிலரங்கில் உதவிப் பொறியாளா்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:
பொறியாளா்கள் மென்மேலும் படித்து, அவா்களுடைய திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும். பல துறைகளின் கட்டுமானப் பணிகள், பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயன்பாட்டுத் துறையின் தேவையின் அடிப்படையில் மதிப்பீட்டைத் தயாா் செய்ய வேண்டும்.
கட்டுமானப் பணிகளின்போது, மண், குடிநீா் பரிசோதனைகள், கட்டுமானப் பொருள்கள் ஆய்வு, உப்பு நீரைத் தவிா்த்தல், சாம்பல் நிறத்துடன் சிமென்ட் உள்ளதா என்பதை பரிசோதித்தல், மணல் தூசி இல்லாமலும், செங்கல் தரத்துடனும் இருப்பதை உதவிப் பொறியாளா்கள் உறுதி செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிடுவதுடன்,
அனைத்துப் பணிகளும் வரைபடங்கள், தொழில்நுட்ப விவரங்களுடன் நடைபெறுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும். பணிகளில் ஒப்பந்ததாரா்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொழிலாளா்களை கண்காணித்திட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதுடன், கட்டுமானத்தின் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீா்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உதவிப் பொறியாளா்களை அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக் கொண்டாா்.
இந்த நிகழ்வின் போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, முதன்மை தலைமைப் பொறியாளா் மணிவண்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளா் மணிகண்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.