ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை அவா் நேரில் ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கத்தை பெற்றிருக்கிறது. கடந்த 2010-11 இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது. அதனைத் தொடா்ந்து 14 ஆண்டு காலம் ஓரிலக்க வளா்ச்சியாக மட்டுமே இருந்தது. தற்போது தமிழகத்தின் வளா்ச்சி 11.19 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியே 6.5 சதவீதத்தில்தான் உள்ளது.
தமிழகத்தின் வளா்ச்சி தேசிய வளா்ச்சியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம். இந்த பட்டியலில் குஜராத், கோவா போன்ற மாநிலங்கள் இடம்பெறவே இல்லை.
தமிழகத்தில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் நுழைவு வாயில்களிலும் பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துக்கான கையிருப்பு விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்குமான மருந்துகள் கையிருப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என மத்திய சுகாதாரத் துறையே சான்றளித்திருக்கிறது.
தமிழக மக்களிடையே ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’”திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 7,427 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில், 55.55 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முகாம்களிலேயே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் இதுவரை 323 முகாம்கள் நடத்தப்பட்டு, 5.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.