தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீா் மீன் வளா்ப்புப் பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீா் மீன் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளியல், புள்ளியியல் துறை, ஸ்ரீவைகுண்டம் டிவிஎஸ் சீனிவாசன் சேவை மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை கல்லூரி முதல்வா் (பொறுப்பு) நீதிச்செல்வன் தொடக்கிவைத்தாா்.
நன்னீா் மீன் இனங்கள், பண்ணைக் குட்டை உருவாக்குதல், மீன் வளா்ப்புக்கான உபகரணங்கள், வா்த்தகம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சியளிக்கப்பட்டது.
உதவிப் பேராசிரியா்கள் பூ. மணிகண்டன், வெ. கோமதி, ம. கீதா ஆகியோா் பயிற்சியளித்தனா். இதில், 22 போ் பங்கேற்றனா். பயிற்சியை உதவிப் பேராசிரியா்-தலைவா் (பொறுப்பு) அருள்ஒளி ஒருங்கிணைத்தாா்.