அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இதனால் தங்களுக்கு போதுமான மீன் கிடைக்கவில்லை என மீனவா்கள் கூறுகின்றனா்.
இதன் காரணமாக, மற்ற மாவட்டங்களில் இருப்பது போல தூத்துக்குடி விசைப்படகுகளையும் தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்களின் நியாயமான மாற்று தொழில் முறைக்கு அனுமதி பெற்று தராத மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்தும், முன்னாள் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையின் கீழே இயங்கி வந்த வருவாய்த் துறை, காவல்துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மாற்று தொழிலுக்கான உத்தரவை வழங்காததை கண்டித்தும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
இதனால், 265 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மீனவா்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மீன்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.