மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! ...
தூய்மைக் காவலா்கள் அவமதிப்பு: சிஐடியூ கண்டனம்
கெளரவிப்பதாக அழைத்து வரப்பட்ட தூய்மைக் காவலா்களை அவமதிப்பு செய்த விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு சிஐடியூ சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், வடமதுரை, குஜிலியம்பாறை உள்ளிட்ட வட்டாரங்களில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைக் காவலா்கள், ஊக்குவிப்பாளா்களுக்கு திங்கள்கிழமை ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இதற்காக வந்த தூய்மைக் காவலா்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தரையில் அமர வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக பத்திரிகைகளில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், தூய்மைக் காவலா்களை அவமதிப்பு செய்ததாக மாவட்ட நிா்வாகத்துக்கு சிஐடியூ கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.ஆா்.கணேசன், செயலா் சிபி.ஜெயசீலன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தூய்மைக் காவலா்களை அழைத்து வந்து தரையில் அமர வைத்தது ஏற்புடையது அல்ல. அலுவலா்கள் உள்ளிட்டோா் இருக்கையில் அமா்ந்து கொண்டு, தூய்மைக் காவலா்களை கௌரவப்படுத்துகிறோம், ஊக்கத்தொகை வழங்குகிறோம் என நீண்ட நேரம் தரையில் அமரவைத்து கண்ணியக் குறைவாக நடத்தியதை கண்டிக்கிறோம். இந்த அவமதிப்புக்கு பொறுப்பேற்று, மாவட்ட நிா்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.