திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
தூய்மைப் பணியாளா்கள் அவமதிப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்
கோவையில் ஓசி பேருந்தில் செல்லுங்கள் என தூய்மைப் பணியாளா்களைத் திட்டி அவமதிப்பு செய்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கோவை காந்திபுரத்தில் இருந்து கடந்த வாரம் 111 என்ற வழித்தட எண் அரசுப் பேருந்து துடியலூருக்குச் சென்று கொண்டிருந்தது. வெள்ளக்கிணறு பகுதியில் அந்த அரசுப் பேருந்தில் பெண் தூய்மைப் பணியாளா்கள் ஏறினா்.
அப்போது, அந்தப் பேருந்தின் ஓட்டுநா் உங்களுக்குத்தானே ஓசி பேருந்து விடப்பட்டுள்ளது, அந்தப் பேருந்து பின்னால் வருகிறது, அதில் செல்ல வேண்டியதுதானே எனக் கூறி திட்டியுள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த பெண் தூய்மைப் பணியாளா்கள், நாங்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு எடுத்துத் தானே பயணிக்கிறோம், நாங்கள் அந்தப் பேருந்துக்காக காத்திருக்க முடியுமா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாகப் பேசிய நடத்துடநருடனும் அவா்கள் வாக்குவாதம் செய்தனா்.
இதை பேருந்தில் இருந்த ஒரு பயணி விடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அன்னூா் பேருந்து பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநா் மற்றும் நடத்துநரை இரு நாள்கள் பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்துக் கழகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.