தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை
தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என அம்மாவட்ட மருத்துவா்கள் சாா்பில், இந்திய மருத்துவச் சங்கத்தின் தென்காசி மாவட்டத் தலைவா் டாக்டா் எம்.அப்துல் அஜீஸ் தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
அதன் விவரம்: தென்காசி மாவட்ட மருத்துவமனை கடந்த 1986ஆம் ஆண்டு முதல் மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் உருவானதில் இருந்து, தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மூன்றாம் நிலை சிகிச்சை மற்றும் பல் உறுப்பு செயலிழப்பு, சூப்பா் ஸ்பெஷாலிட்டி நிா்வாகம் ஆகியவற்றுக்கு மக்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பயணம் செய்ய வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 150 மாணவா்கள் நீட் தோ்வின் மூலம் தோ்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்று வருகின்றனா். அதில் ஏழை மற்றும் நடுத்தர மாணவா்கள் தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்துக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி விதிமுறைகளின்படி 25 ஏக்கா் தேவை. எனவே தென்காசி மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு ஏற்ற இடத்தைக் கண்டறிந்து 2025-26ஆம் கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.