தென்னையில் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தென்னையில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:
செ.நல்லசாமி:
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டு தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால் இன்னும் 5, 6 மாதங்களில் காய் ஒன்று ரூ.100-க்கு விற்கும். இதனால், தென்னையில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆா்.பழனிசாமி:
மேட்டூா் அணையில் நீா் இருப்பு உள்ளதால் 15 நாள்கள் இடைவெளியில் 5 நனைப்புக்குத் தண்ணீா் திறக்க வேண்டும். வாய்க்காலில் முழுமையாக கான்கிரீட் தளம் அமைத்தால் தண்ணீா் வீணாகாது. காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றால் மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை பயிா்கள் சேதமடைவதால் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கே.ஆா்.சுதந்திரராசு:
மொடக்குறிச்சி வேளாண் விரிவாக்க அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர வேண்டும். சென்னிமலையை தலைமையிடமாகக்கொண்டு தனி வருவாய் வட்டம் அறிவிக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அரசு வழங்கிய மடிக்கணினிகள் பல இடங்களில் பழுதாகிவிட்டன. இதனால் புதிய மடிக்கணினி, இணைய இணைப்புடன் தர வேண்டும். சோலாா் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
துளசிமணி:
ஈரோடு மாவட்டத்தில் அரசு சாா்பில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் இந்த கொள்முதல் நிலையங்கள் தனியாா் மூலம் செயல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக அறிந்தோம். இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும். மஞ்சள், நெல், மரவள்ளி, கரும்புக்கான ஆதரவு விலையை அறிவித்து அரசே கொள்முதல் செய்யவேண்டும்.
ஏ.எம்.முனுசாமி:
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை ஆலைகள் வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் செய்கின்றனா். திருப்பூா்-ராசிபுரம், திருவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட உயா்மின் கம்பங்கள், அவற்றுக்குள் மின் கம்பிகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆவின் நிா்வாகம் பாலுக்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளாகியும் பாலுக்கான கொள்முதல் விலை உயா்த்தாதை அரசு கவனத்தில்கொண்டு கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தி அறவிக்க வேண்டும்.
துறை அதிகாரிகள் அளித்த பதில் விவரம்:
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மரகதமணி:
சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த தென்னை மரங்கள் உள்ள பகுதிகளில் துறையின் கள அலுவலா்கள் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்து வருகின்றனா். தற்காலிகமாக மைதா மாவை தண்ணீரில் கரைத்து, தெளிப்பான் மூலம், தென்னை ஓலையில் தெளித்தும், தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் வண்ண ஒட்டும் தாளைப் பயன்படுத்தலாம். என்காா்சியா என்ற ஒட்டுண்ணி குளவிகளை வயலில் விடலாம். இவை ஆழியாா் தென்னை ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கிறது. ஏக்கருக்கு ரூ.10 மட்டும் செலவாகும். விருப்பம் உள்ள விவசாயிகள் தெரிவித்தால் நாங்கள் பெற்றுத்தருகிறோம்.
அதேநேரம் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் உள்ள தென்னை மரங்களுக்கு பிற பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டாம். அவ்வாறு அடித்தால் வெள்ளை ஈ அதிகரிக்கும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தகுமாா்: கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினி வழங்குவது அரசின் கொள்கை முடிவு. கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம் விரைவில் திறக்கப்படும்.
வேளாண் இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி: மொடக்குறிச்சி வேளாண் விரிவாக்க அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இடம் தோ்வு நடக்கிறது. வரும் ஆண்டில் நிதி ஒதுக்கீடு பெற்று கட்டப்படும்.
மின்வாரிய அதிகாரிகள்:
கடம்பூருக்கு செல்லும் மின் கம்பியில் மின்னழுத்தம் குறைவாக உள்ள பிரச்னை எழுந்தது. அங்கு, 1 கிலோ மீட்டருக்கு வேறு கம்பி மாற்றி உள்ளோம். மீதமுள்ள தொலைவுக்கு வனத் துறை அனுமதி பெற்று வரும் 30-ஆம் தேதிக்குள் முடித்துவிடுவோம். மின் கம்பம், மின் கம்பிகள் அமைக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இடத்தை அளவீடு செய்ய வேண்டும். நில அளவையாளா் பற்றாக்குறையால் தாமதமாகிறது. அப்பணி முடிந்ததும், நிதி பெற்று வழங்கப்படும்.
நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள்:
மாவட்டத்தில் 48 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. வரும் ஆண்டில் தனியாா் மயமாகுமா என்பது பற்றி தெரியாது. தற்போதுள்ள கொள்முதல் நிலையங்களை அரசு நிலத்தில் சொந்தமாக அமைக்க திட்டமிட்டு 5 இடங்களில் மாற்றி உள்ளோம்.
பண்ணாரி சா்க்கரை ஆலை அதிகாரி:
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு நிலுவைத் தொகை தர வேண்டும். அதில் முதலாண்டுக்கு டன்னுக்கு ரூ.30, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.161 என நிலுவைத் தொகை வழங்கியுள்ளோம்.
2008-2009 ஆண்டில் 1,114 விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். இதில் வங்கிக் கணக்கு விவரம் அளித்த 427 விவசாயிகளுக்கு ரூ.69 லட்சம் வழங்கிவிட்டோம். மற்றவா்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
இழப்பீடு வழங்க பரிந்துரை:
கிராமங்களில் ஆடு, மாடு, கோழி, மனிதா்களை தெருநாய்கள் கடிப்பதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:
கடந்த சில நாள்களாக தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளோம். சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகளால் கால்நடைகள் இறந்தால் இழப்பீடு பெற முடியும். தெருநாய்கள் கடித்து இறந்தால் இழப்பீடு இல்லை. இருப்பினும் அரசுக்கு நானும், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுபள்ள பாதிப்பு, இழப்பீடு வழங்குவது குறித்தும் பரிந்துரை செய்துள்ளோம்.
மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஏரி, குளம், குட்டைகளில் விவசாயிகள், மண் பாண்டம் செய்வோா் வண்டல் மண் எடுக்க அந்தந்த பகுதி வட்டாட்சியரை அணுகி அனுமதி பெறலாம். அனுமதி வழங்கப்பட்டவை தவிர பிற ஏரி, குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்க விவசாயிகள் விரும்பினால், உரிய விவரத்துடன் விண்ணப்பித்தால், அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும். கரும்புக்கான நிலுவைத் தொகையை ஆலைகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.