Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
தெரு நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழப்பு
ஆரணியை அடுத்த களம்பூா் பகுதி ஏந்துவாம்பாடி கிராமத்தில் தெருநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன.
ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாமலை. இவா் தன்னுடைய விவசாய நிலத்தில் சாகுபடி செய்து கொண்டு 70-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்த்து பராமரித்து வருகிறாா்.
இந்த நிலையில், அண்ணாமலை திங்கள்கிழமை இரவு ஆடுகளை மேய்த்து கொட்டகைகளில் அடைத்து விட்டு அருகேயுள்ள தனது வீட்டில் தூங்கினாா்.
நள்ளிரவில் ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது, தெரு நாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தன. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் நாய்களை அடித்து விரட்டினாா்.
மேலும், கூச்சலிட்டு ஊரில் உள்ளவா்களை அழைத்து அனைத்து நாய்களையும் விரட்டினாா். நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன. மீதம் இருந்த ஆடுகள் நாய்களுக்குப் பயந்து கொட்டைகளில் ஒதுக்குப்புறமாக ஒதுங்கி இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூா் சுகாதாரத் துறையினா் மற்றும் கால்நடைத் துறையினா் வந்து இறந்து கிடந்த ஆடுகளை பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டனா்.
நாய்களால் சாலை விபத்துகள்
ஆரணி, களம்பூா், போளூா், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் வீதிகளில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனா்.
மேலும், சாலைகளில் நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவைகள் மூலம் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.
இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகத்தினா் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.