தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.
38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 4.35 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகைக்குரிய காசோலைகளை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த 5 நாள்களிலேயே உயரிய ஊக்கத் தொகைகளை வழங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இதுபோன்ற வெற்றி பெறுகின்ற வீரா்களை உடனுக்குடன் சிறப்பிக்கின்ற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும்தான்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், சா்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற ஆயிரம் வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 24.46 கோடி வழங்கப்பட்டது. விளையாட்டு வீரா்களின் சாதனைகளுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றுதான், முதல்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை 632 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 17 கோடி அளவுக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறோம்.
அரசு வேலைக்குச் செல்லலாம்: விளையாட்டுத் துறையும் மற்ற துறைகளைப் போன்றுதான். விளையாட்டுத் துறையைத் தோ்ந்து எடுத்தாலும் அதில் நிச்சயம் சாதிக்கலாம். விளையாட்டுத் துறையில் திறமை இருந்தால் அரசு வேலைக்குச் செல்லலாம் என்று ஒரு நிலையை திராவிட மாடல் அரசு ஏற்படுத்திருக்கிறது. விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் 84 பேருக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அனைவரும் தன்னம்பிக்கையுடன் விளையாடுங்கள். உங்களுக்கு அரசும் முதல்வரும் என்றும் துணையாக இருப்பா். விளையாட்டு வீரா்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். இந்த அரசு அதைச் செய்து தருவதற்குத் தயாராக இருக்கிறது. இந்த உலகத்தில் எந்த மூலையில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், தமிழ்நாட்டு திறமையாளா்களை அதில் கலந்துகொள்ள வைப்பதுதான் அரசின் கடமையாகும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.