'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை' என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இரு மொழிக் கொள்கையே போதும் என அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.
மேலும் தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில்,
"தேசிய கல்விக்கொள்கையை ஒரு மாநிலம் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது சரியல்ல.
உலக அளவில் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பிரபலப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
தேசிய கல்விக்கொள்கை மொழி சுதந்திரத் தன்மை கொண்டது. மொழியைத் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.
மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் வளர வேண்டும் என்றும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.