தேரிக்காடுகளில் விவசாயம் சாா்ந்த தொழில்களில் மகளிருக்கு வாய்ப்பு! -பாஜக கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட தேரிக்காட்டுப் பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளகான், முதல்வா் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்கள் நீண்ட நாள்களாக வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.இவ்விரு வட்டங்களிலும் பெரும்பாலோா் வருமானம் இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயா்ந்து வருகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் இம்மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் தேரி வனப்பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம், அது சாா்ந்த தொழில்களில் ஈடுபட அனுமதிக்கலாம்.
இந்நிலங்களில் தென்னை, முந்திரி, ஊடு பயிராக மிளகாய், தக்காளி, கத்தரிக்காய்,வெண்டைக்காய் ஆகியவற்றை பயிரிடலாம்.தென்னையில் இருந்து பால் எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் மூலம் பல்வேறு வழிகளில் பெண்களின் வருமானம் கூடும்.கிராமப்புற பொருளாதாரம் உயரும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.