செய்திகள் :

தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் வியூக வகுப்பாளர்கள்; அவர்கள் செய்யும் வேலை என்ன? | Explainer

post image

இன்றைய அரசியல் கட்சிகள் அரசியல் வியூகங்களை வகுக்க, தேர்தலில் இறங்கி வேலை பார்க்க தங்களுக்கென அரசியல், தேர்தல் வியூக வகுப்பாளர்களை வைத்துக் கொள்கின்றன. தேர்தல் களத்தில் அவர்கள் என்னதான் செய்கிறார்கள், எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றியதே இந்தக் கட்டுரை.

2014 மக்களவைத் தேர்தல்:

இந்திய வரலாற்றில் 2014 மக்களவைத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஆட்சி மாற்றம் என்பதையெல்லாம் தாண்டி, தேர்தல் அரசியலில் அரசியல் வியூகங்களை வகுக்கும் கார்ப்பரேட்கள் அசுரத்தனமாக வளர்ச்சிப் பெற்றுப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேர்தல் அது.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் நரேந்திர மோடி என்பவர் குஜராத்தைத் தவிர, வேறெந்த மாநிலத்திலும் பெரிதாக பிரபலமாகாதவர். 2013 - 2014 சமயத்தில் ‘டீ கடை டு பார்லிமென்ட்’ என அவரை அடையாளப்படுத்தி சாமானிய மக்களோடு உணர்வுப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் அறிமுகமானார். ‘தேநீர் விவாதம் 'ChaipeCharcha (Talk over tea)’ என வீடுவிடாகச் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களுடன் தேநீர் அருந்தியபடி பிரசாரம் செய்தார். யாரும் எதிர்பார்க்காமல் அதிரடியாக நடந்த அந்தச் சம்பவம் மோடியின் முகத்தை நாடெங்கும் கொண்டு சேர்த்தது. அதேபோல ‘மோடி 3D’ என ஹாலோகிராம் மூலம் திரை ஒலியில் மோடி தோன்றி, பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றியது மக்களை ஈர்த்தது. தேர்தலில் புகுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பாய்ச்சலாக இருந்தது.

மோடி, பிரசாந்த் கிஷோர்

குஜராத் பல விஷயங்களில் பின்தங்கி இருந்தபோதும் ‘குஜராத் மாடல்’ என பிரபலப்படுத்தி விளம்பரப்படுத்தப்பட்டு, முன்னேறிய மாநிலம்போல இந்தியா முழுவதும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார்கள். சோஷியல் மீடியா முழுவதும் பிரசாரத்தின் தீ பரவின. இந்த அரசியல் வியூகங்கள் எல்லாம் 2014 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ‘பா.ஜ.க’வின் பெரும் வெற்றிக்குப் பெரும் பக்கபலமாக இருந்ததை மறுக்க முடியாது. இந்தத் தேர்தல் வியூகங்களை வகுத்தவர் இன்றைக்கு பிரபல அரசியல் வியூக வகுப்பாளராக இருக்கும் பிரசாந்த் கிஷோர்.

அதிலிருந்துதான் இந்தியாவில் அரசியல் வியூகங்களை வகுக்கும் கார்ப்பரேட்கள் பிரபலமாகி, அரசியலில் ஊடுருவின. இன்றைக்கு பல பிரசாந்த் கிஷோர்கள் உருவாகிவிட்டனர். ஆரம்பத்தில் பிரசாரங்கள், அரசியல் விளம்பரங்களுக்குப் பயன்பட்டு வந்த இந்த அரசியல் வியூகம் வகுக்கும் கார்ப்பரேட்கள், இப்போது அரசியலை ஆட்டம் காண வைக்கும் பெரும் பூதமாக உருவெடுத்து நிற்கின்றன. பிரஷாந்த் கிஷோர், ரிஷி ராஜ் சிங் (I - PAC), ராபின் ஷர்மா (ShowTime Consulting), ஜான் அரோக்கியசாமி (JPACPersona), சுனில் கனுகோலு எனப் பல தேர்தல் வியூக வகுப்பாளர்கள் வரிசைக் கட்டி நிற்கின்ற்னர்.

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் 'அ.தி.முக ஆட்சியை அகற்றுவோம்', 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்', 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்', 'ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு' என தமிழ்நாட்டு மக்களுக்கு 'அ.தி.மு.க' ஆட்சியின் மேல் இருந்த அதிருப்தியையும், மத்திய 'பா.ஜ.க' எதிர்ப்பையும் சரியாகப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி அரசியல் வியூகங்களை வகுத்தது 'I - PAC' நிறுவனம்தான். அப்போது ரிஷி ராஜ் சிங், பிரஷாந்த் கிஷோரும் அந்நிறுவனத்தில் இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்தனர். அந்தத் தேர்தலில் 'தி.மு.க' பெரும் வெற்றியைப் பெற்றது.

2024 ஆந்திரா தேர்தல்:

2024 ஆந்திரா தேர்தலில் ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தியதில் முக்கிய ஆயுதமாக இருந்தது 'சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்' கூட்டணி. இருப்பினும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, நிலமில்லாதவர்களுக்கு நிலம் வழங்குவதாக அறிவித்திருந்தத் திட்டத்தை அவருக்கு எதிராகவே மாற்றிய சந்திரபாபுவின் தந்திரம் ஆந்திர தேர்தலையே புரட்டிப்போட்டது.

ராபின் ஷர்மா, சந்திரபாபு நாயுடு

ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்த அந்த நிலங்களின் ஆவணத்தில் ஜெகன் மோகனின் புகைப்படம் இருந்ததால், 'அந்த நிலங்களெல்லாம் சட்டப்படி ஜெகன் மோகன் ரெட்டிக்கே சொந்தமாகும்' என பிரசாரம் செய்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினார் சந்திரபாபு நாயுடு. அது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் வெற்றிக்கு வழிவகுத்தது. இருவரும் அதிகாரத்தை சமமாகப் பகிர்ந்து கொண்டது அவர்களின் கூட்டணியை வலுபெறச் செய்திருந்தது. இதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்தது ராபின் ஷர்மாவின் 'ShowTime Consulting' நிறுவனம்தான்.

இப்படியாக ஆட்சி மாற்றத்திலும், தேர்தல் அரசியல் வியூகங்களை வகுப்பதிலும் அரசியல் வியூக வகுப்பாளர்களின் பங்கு இன்றைய காலங்களில் அதிகமாகவே இருக்கின்றன.

தேர்தல் அரசியல் வியூகங்கள், வேலைகள் இப்படித்தான் நடக்கின்றதா!

தேர்தல் அரசியல் வியூகங்கள் எப்படி நடக்கின்றன, இந்நிறுவனங்கள் தேர்தலுக்காக எப்படி இறங்கி வேலை பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள அந்நிறுவனத்தில் பணிபுரியும் முக்கியமான சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்கள் இந்த அரசியல் வியூகங்களை வகுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று கருதுகிறோம். அவர்கள் சொன்ன தகவல்கள் இங்கே...

அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து வியூகங்கள் வகுக்கும் நிறுவனத்தினர், பல அணிகளாகப் பிரிகின்றனர். தொகுதிகளின் களநிலவரத்தை ஆராய்வது, தகவல்களை சேகரிப்பது, சமூக வலைதளங்களைக் கையாளுவது, பிரசார உரைகளைத் தயாரிப்பது, தேர்தல் வாக்குறுதிகள் தயார் செய்வது, பிரசாரத்திற்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்வது, மாநாடு - நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, என பல குழுக்களாக இறங்கி வேலை பார்க்கின்றனர். இந்த அரசியல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தில் பெரும்பாலும் ஐ.ஐ.டி - இந்திய தொழில்நுட்பப் பல்கலைள்கழகக்தைச் சேர்ந்தவர்களையே அதிகம் பணிக்கு எடுப்பதாகக் கூறுகின்றனர் அதில் பணிபுரிபவர்கள்.

தேர்தல்

களப்பணிகள்:

மாநிலத்தை மூன்று, நான்கு மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனிக் குழுக்களை நியமிக்கின்றனர். அந்தக் குழுக்கள் அந்தந்தத் தொகுதிகளில் அலுவலகம் எடுத்துத் தங்கி அங்கிருக்கும் கட்சியின் நிர்வாகிகள், வேட்பாளர்களின் துணையுடன் ஒவ்வொரு தொகுதியாக, வார்டு வார்டாக சர்வேக்களை எடுக்கின்றனர். ஆதரவு, எதிர்ப்பு, அங்கிருக்கும் பிரச்னைகள், வாக்காளர்களின் நிலை என எல்லாவற்றையும் சர்வே எடுக்கின்றனர்.

தேர்தல் வியூகம் வகுப்பவர்கள் கட்சியின் தலைமையிடம் களநிலவர ஆராய்ச்சியின் தகவல்களை எடுத்துக் கூறி, அதன் அடிப்படையில் அரசியல் நிகழ்வு, பிரசார ஏற்பாடு யுக்திகளை கலந்துரையாடி செயல்படுத்துகின்றனர். தொகுதியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக செய்தி உரைகள், பிரசார உரைகள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். கட்சி நிர்வாகிகளின் துணையுடன் தொகுதி மக்களைச் சந்தித்து, பிரசார வீடியோக்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகள் என பல விஷயங்களைச் செய்கின்றனர். தலைவர்களை, நட்சத்திரங்களைத் தொகுதிக்கு அழைத்து, பொதுமக்களிடம் உரையாட வைப்பது... அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்வது என எல்லாவிதமான தேர்தல் பணிகளையும் கட்சியுடன் சேர்ந்து பார்க்கின்றனர். கட்சித் தலைமை அலோசனையுடன்தான் ஒவ்வொரு நகர்வும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருகின்றனர்.

சமூக வலைதள பிரசாரங்கள்

சமூக வலைதள பிரசாரங்கள்:

கட்சித் தலைவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் முதல் பிரசார வீடியோக்கள், வைரல் வீடியோக்கள், தேர்தல் அறிக்கைகள்வரை அனைத்தையும் சமூக வலைதளங்களில் வைரல் செய்வது இதில் அடங்கும். தினமும் 100 - 500 பேர் இதற்கெனத் தனிக் குழுவாக நியமிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பிரசாரப் பதிவுகளைப் பதிவிட்டு, பகிர்ந்து வைரல் செய்வதாகக் கூறுகின்றனர். ஏரளமான சமூக வலைதளப் பக்கங்கள், கணக்குகளும் இதற்கெனத் தனியாக வைத்திருக்கின்றனர். கட்சிகளின் இந்த சமூக வலைதள பிரசாரங்கள்தான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் தினமும் வைரலாகின்றன. எது உண்மை, எது பொய் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இவை உலா வந்துகொண்டிருக்கின்றன. சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பவர்களையும் இதில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகள், பிரசார உரைகள்:

ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பிரச்னையிருக்கிறது, என்ன பேசினால் கவனம்பெறும், எந்தத் திட்டம் கவர்ச்சியாக இருக்கும் என சர்வே எடுக்கின்றனர். தொகுதியின் களநிலவரத்தில் சேகரிக்கப்பட்ட அந்தத் சர்வே மற்றும் கட்சியின் தேர்தல் திட்டங்களை வைத்துக் கொண்டு கட்சித் தலைமையின் கலந்தோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்து, அதைப் புதுமையான விளம்பர யுக்தியுடன் மக்களிடம் விளம்பரப்படுத்துகின்றனர். சமூக வலைதளம், இணையதளங்கள், சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள், வீடியோக்கள், விளம்பரங்கள், பாடல்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை, பிரசார உரைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

மாநாடு

மாநாடு - நிகழ்ச்சிகள் ஏற்பாடு:

கட்சியின் மாநாடு, நிகழ்ச்சிகளை கவனம் ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்வது, அதற்கேற்ப பதாகைகள் வடிவமைப்பு, மேடைகள் வடிவமைப்பு, கவனம் ஈர்க்கும் வகையில் நட்சத்திரங்களைப் பங்கேற்க வைப்பது, கவனம் ஈர்க்கும் வீடியோக்கள், சின்ன சின்ன பொருட்கள் ஏற்பாடு வரை நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் தனி கவனத்துடன் ஏற்பாடு செய்கின்றனர் இக்குழுவினர்.

இப்படியாகப் பல குழுவினர் இந்த தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவில் வேலை செய்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால்; கட்சியின் தலைமைதான் இவற்றையெல்லாம் வழிநடத்தும். கட்சியின் அனுமதியின்றி எதுவும் செய்யமுடியாது. கட்சிக்கு உறுதுணையாக இருந்து, கட்சிக்காரார்கள் பார்க்க வேண்டிய வேலைகளையெல்லாம் அரசியல், தகவல்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த, திறமையுள்ள படித்த இளைஞர்களை வைத்து தேர்தல் பணிகளைச் செய்வதுதான் இந்நிறுவனங்கள் வேலை.

தேர்தல் மட்டுமல்லாமல், பிரச்னைகள், சர்ச்சைகளைக் கையாளுவது, தலைவர்களின் பிம்பங்களைக் கட்டமைத்து கவர்ச்சியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது என அரசியல் வியூக வகுப்பாளர்கள் பல வேலைகளைச் செய்கின்றனர்.

தேர்தல்

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ஒவ்வொரு கட்சியும் இரண்டு, மூன்று அரசியல் வியூக வகுப்பாளர்களை நியமித்துக் கொண்டிருக்கின்றன. என்றுமில்லாமல் இந்தத் தேர்தலில் அரசியல் வியூக வகுப்பாளர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர். கட்சிகளுக்கிடையே மட்டுமன்றி, அவர்களுக்கிடையேயும் போட்டிகள் நிலவுகின்றன. சமூக வலைதளம், தொலைக்காட்சி, தியேட்டர் விளம்பரங்கள் என திரும்பும் திசையெல்லாம் அரசியல் பிரசாரங்கள், தேர்தல் வாக்குறுதிகள், கவர்ச்சியானத் திட்டங்கள் என மக்களின் வாக்குகளைத் தின்று தீர்க்க அதிகார வெறியுடன் சுற்றித் திரிந்தாலும், இந்த வலைகளில் மக்கள் சிக்காமல் பகுத்தறிந்து, சிந்தித்து வாக்குச் செலுத்துவதே ஜனநாயகத்திற்கு நல்லது. என்னதான் அரசியல் கட்சிகளும், அரசியல் வியூக வகுப்பாளர்களும் பல கணக்குகள் போட்டாலும் இறுதியானது மக்கள் போடும் கணக்குதான். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'.

ஒன் பை டூ

ஈ.ராஜாஈ.ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது... கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தங்களின் ஊழல் குற்றங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக, உதய் மின் திட்டம் தொடங்கி ... மேலும் பார்க்க

Train Hijack: 400 பயணிகளுடன் ரயிலைக் கடத்திய கிளர்ச்சியாளர்கள்; பரபரக்கும் பாகிஸ்தான் -பின்னணி என்ன?

பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்திருக்கும் பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவருக்கு 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 11) கடத்தப்பட்டிருக்கிறது.பலூச்சிஸ்த... மேலும் பார்க்க

`இதெல்லாம்தான் நாகரிகமா..?' - மத்திய அரசை நோக்கி எம்.பி சு.வெங்கடேசன் அடுக்கும் கேள்விகள்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து நேற்று (மார்ச் 10) தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்ட... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் : அமளிக்கு நடுவே நிறைவேறிய இரு முக்கிய மசோதாக்கள்..! - முழு விவரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளே தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய கல... மேலும் பார்க்க

Tesla : ஐரோப்பிய நாடுகளில் ‘டெஸ்லா’ வீழ்ச்சி... ட்ரம்ப் கூட்டுறவால் எலானுக்கு சரிவா? - ஓர் அலசல்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம், அதன் உரிமையாளரான எலான் மஸ்க்கின் அரசியல் நடவடிக்கையால் ஐரோப்பிய சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.ஐரோப்பிய ஆட்டோமொபைல் ... மேலும் பார்க்க

``மாநில அந்தஸ்து தொடர்பான 13 தீர்மானங்கள் டெல்லிக்கே சென்றதில்லை”- புதுச்சேரி சபாநாயகர் சொல்வதென்ன ?

புதுச்சேரி சட்டசபையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், ``புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரை 13 நாட்கள் நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறோம். 12-... மேலும் பார்க்க