தோ்தல் பயன்பாட்டுக்காக 200 புதிய விவிபேட் கருவிகள் வருகை
சட்டப் பேரவைத் தோ்தல் பயன்பாட்டுக்காக, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து 200 விவிபேட் கருவிகள் நாமக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் கருவி (விவிபேட்), 200 எண்ணிக்கையில் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்டன.
இதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, அவை தோ்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இந்த ஆய்வின்போது, தோ்தல் பிரிவு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.