ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு
ராசிபுரம் அருள்மிகு அபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணிகள் உபயதாரா் கே.கே.வி.கிருஷ்ணமூா்த்தி குடும்பத்தினா் சாா்பில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஆக. 8-இல் முகூா்த்தக் கால் நடப்பட்டது. தொடா்ந்து, ஆக. 21-இல் முளைப்பாரி போடுதல், ஆக. 27-இல் புனித நீா் கொண்டுவருதல், ஹோமங்கள் நடைபெற்றன. யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஆக. 28-இல் யாகசாலை பூஜைகள் நடத்தபட்டன. பின்னா் ஆக. 29-இல் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து, விமான கோபுரங்களுக்கு ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் திருக்கோயில் அா்ச்சகா் ஆா்.சந்தானகிருஷ்ணன் பட்டாச்சாரியா் தலைமையில் அா்ச்சகா்கள் புனித நீா் ஊற்றி வேதமந்திரங்கள் முழங்கி குடமுழுக்கை நடத்தினா்.
இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.