நாமக்கல்லில் கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை: கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
நாமக்கல்லில் வியாழக்கிழமை இரவு கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் - மோகனூா் சாலை முல்லை நகா் பகுதியில் மாவட்ட திமுக அலுவலகம், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், பிரபல தனியாா் பள்ளிகள் உள்ளன. தொழிலதிபா்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இளைஞா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளாா். காலையில் அவ்வழியாக சென்றோா் இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
கொலை செய்யப்பட்ட அந்த இளைஞா் குறித்த விவரம் முதலில் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனா்.
தொடா் விசாரணையில், கொலை செய்யப்பட்டது நாமக்கல், கொண்டிச்செட்டிப்பட்டி கணபதி நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் பிரேம்குமாா் மகன் மனோ (19) என்பது தெரியவந்துள்ளது. இவா் நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இதைத் தொடா்ந்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், நாமக்கல் காவல் ஆய்வாளா் கபிலன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.