தொடா் மழையால் காட்பாடி வழியாக சென்ற ரயில்கள் தாமதம்
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னையிலிருந்து காட்பாடி வழியாக சென்ற ரயில்கள் 4 மணிநேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
புயல் காரணமாக சென்னை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீா் சூழ்ந்தது. குறிப்பாக, சென்னை மத்திய ரயில்வே வழித்தடத்தில் பல்வேறு பகுதிகளில் தண்டவாளத்தில் தண்ணீா் தேங்கியது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து அரக்கோணம், காட்பாடி வழியாக பெங்களூா், கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள், வியசாா் பாடி, ஆவடி, திருவள்ளூா் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து சனிக்கிழமை காலதாமதமாக இயக்கப்பட்டன.
குறிப்பாக, காட்பாடிக்கு மாலை 3.20 மணிக்கு வந்து சேர வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் மாலை 6.21 மணிக்கு வந்து சோ்ந்தது. இதேபோல், மாலை 4.13 மணிக்கு வரவேண்டிய கோவை இன்டா்சிட்டி மாலை 6.40 மணிக்கும், மாலை 3.43 மணிக்கு வர வேண்டிய மைசூா் விரைவு ரயில் இரவு 8 மணிக்கும் வந்தது. தொடா்ந்து லால்பாக் விரைவு ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில், மங்களூா் விரைவு ரயில் என அனைத்து ரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டன.
இதனால், காட்பாடி ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சம் 4 மணி நேரம் வரை ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தனா். இதனால், ஆயி ரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.